தேசிய செய்திகள்

தனி மனித சுதந்திரத்துக்கு ஆதார் அட்டையால் ஆபத்து மம்தா பானர்ஜி சொல்கிறார்

தனி மனித சுதந்திரத்துக்கு ஆதார் அட்டையால் ஆபத்து என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

ஆதார் அடையாள அட்டையை மத்திய அரசு தனது சலுகைகள், நலத்திட்டங்களைப் பெற கட்டாயம் ஆக்கி வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடுத்துள்ளனர்.

ஆதார் அடையாள அட்டையில் பதிவாகியுள்ள தகவல்களை வெளியிடக்கூடாது என்பது சட்ட விதிமுறை.ஆனால் இந்த விதிமுறையை மீறி மத்திய, மாநில அரசுகளின் 210 இணையதளங்களில் ஆதார் அடையாள அட்டைதாரரின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆதார் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்திய தனித்துவ அடையாள அங்கீகரிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர், ஆதார் எண்ணை இணைப்பது என்பது பிரச்சினைக்குரிய ஒன்று. ஆதார் அட்டையின் பெயரால், அரசின் 210 இணைய தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தனி மனித சுதந்திரத்துக்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் ஆபத்தானது என்று கூறி உள்ளார்.