தேசிய செய்திகள்

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு (2018) மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்க தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெற ஆதார் கட்டாயம் என அறிவித்துள்ள மத்திய அரசு வங்கி கணக்கு எண், செல்போன் எண் போன்றவற்றுடன் ஆதாரை இணைக்கவும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கான காலக்கெடுவாக (செல்போன் எண்ணுடன் இணைப்பதை தவிர்த்து) டிசம்பர் 31-ந்தேதியை அறிவித்து உள்ளது.

ஆனால் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆதார் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த அக்டோபர் 30-ந்தேதி உத்தரவிட்டது. இதற்காக 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரம் அமைக்கப்படுகிறது.

அட்டார்னி ஜெனரல்

இந்த நிலையில் ஆதார் தொடர்பான வழக்குகளில் சில, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், அரசின் நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந்தேதியில் இருந்து அடுத்த ஆண்டு (2018) மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

எனினும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு வழங்கப்பட்டு உள்ள காலக்கெடுவான பிப்ரவரி 6 என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார். அதற்குள் ஆதாரை இணைக்காவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த வக்கீல் வேண்டுகோள்

முன்னதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஷியாம் திவான், அரசின் நலத்திட்டங்களுடன் ஆதாரை இணைக்க தவறிய மக்களை, அவ்வாறு செய்யுமாறு கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என அரசு உறுதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SCROLL FOR NEXT