தேசிய செய்திகள்

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை - அபிஜீத் திப்கே

அமைதியான போராட்டங்களால் வணிகம், பாதிக்கப்படாது, அரசின் கட்டுப்பாடுகளால்தான் பாதிக்கப்படும் என அபிஜீத் திப்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அமைதியான போராட்டங்களால் வணிகம் பாதிக்கப்படாது. அரசின் கட்டுப்பாடுகளால்தான் பாதிக்கப்படும் என கரப்பான் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி மற்றும் ஏராளாமான மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தக்கூடிய இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் நேற்று திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனால், தேசியக் கொடியுடன் போராடிய சிஜேபியினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் இன்று போராட்டம் நடத்தப்போவதாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்து இருந்தார்.

இதனிடையே, போராட்டத்தால் பண்டிகை காலங்களில் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கன்னாட் பிளேஸ் வியாபாரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று அவசர வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமான சூழல் உருவானால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்தநிலையில், அரசிடம் பொறுப்புணர்வைக் கேட்பதும், அநீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதும் அராஜகம் அல்ல; அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை ஜனநாயக உரிமை என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (CJP) நிர்வாகி அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

அகிம்சையை பின்பற்றி வருகிறோம்

டெல்லியில் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

நகரம் முழுவதும் முடக்கப்படுவது, இணையதள சேவைகள் நிறுத்தப்படுவது, மக்களின் நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது போன்ற அரசின் நடவடிக்கைகள்தான் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் உண்மையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதே தங்களது கட்சியின் நிலைப்பாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றி வருகிறோம்.

கேள்வி எழுப்புவது அராஜகம் கிடையாது

மும்பை, புனே, ஜெய்ப்பூர், லக்னோ, பெங்களூரு, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் தங்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அவை அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்றது.

ஜெய்ப்பூரில் தாம் தாக்கப்பட்டோம்., இருப்பினும் வன்முறைக்குப் பதிலடி கொடுக்கவிரும்பவில்லை. வன்முறைக்கு வன்முறையால் பதிலளிப்பது தங்களது கொள்கைக்கு எதிரானது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தியே போராடவே விரும்புகிறோம். போராட்டங்களில் ஈடுபடுபவர்களை அராஜகவாதிகள் எனச் சித்தரிப்பது அரசியல் இரட்டை நிலைப்பாடு. , எதிர்க்கட்சியாக இருந்தபோது பல ஆண்டுகளாக வீதிகளில் இறங்கிப் போராடிய கட்சிகள், ஆட்சிக்கு வந்த பிறகு அதே போராட்டங்களைப் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதுவது முரண்பாடானது. அநீதிக்கு எதிராகப் போராடுவதும், அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்புவதும் அராஜகம் கிடையாது.

மக்களின் குரலை ஒடுக்கக்கூடாது

தங்களுக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகைகளும் தேவையில்லை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தவே விரும்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களின் கேள்விகளுக்குச் பதிலளிக்க வேண்டுமே தவிர, அவர்களின் குரலை ஒடுக்கக் கூடாது என அதில் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT