தேசிய செய்திகள்

1993 மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: தாகீர் மெர்சண்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அபு சலீம், கரிமுல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ந் தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணிநேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 100 பேரை குற்றவாளிகள் என்று மும்பை தடா கோர்ட்டு கடந்த 2007ம் ஆண்டு அறிவித்தது. இதில், குற்றவாளி யாகூப் மேமனுக்கு மட்டும் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 30ந் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியபோது, குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட முஸ்தபா டோசா, நிழல் உலக தாதா அபுசலீம், கரிமுல்லா கான், பெரோஷ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் மற்றும் அப்துல் கயூம் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

எனவே, அவர்கள் மீது தடா கோர்ட்டில் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணை கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி தடா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில், தாதா அபுசலீம், முஸ்தபா டோசா, கரிமுல்லா கான், பெரோஷ் அப்துல் ரஷீத்கான், ரியாஸ் சித்திக், தாகிர் மெர்ச்சண்ட் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். அப்துல் கயூமுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அபு சலீம் உள்ளிட்ட 5 பேர் மீதான இறுதி தண்டனை விவரத்தை வருகிற செப்டம்பர் 7-ந் தேதியன்று அறிவிக்கப்படும் என தடா நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், அபு சலீம், கரிமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாகீர் மெர்சண்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.