அமராவதி
மராட்டியத்தில் துர்கா சிலையை எடுத்து வந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள்.
மராட்டியத்தின் வார்தா பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் தசரா பண்டிகைக்காக துர்கா சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். இதற்காக சிலை வாங்கி வர ஷேகான் பகுதிக்கு டெம்போ வேனில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றனர். சிலையை பெற்றுக்கொண்டு வேனில் சொந்த ஊருக்கு திரும்பினர்.
அவர்கள் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் அமராவதி மாவட்டம் தமன்காவ் ரெயில் நிலையம் அருகே சம்ருத்தி விரைவுச்சாலையின் 'சேனல் 97' பகுதியில் வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையில் பின்னால் விரைவாக வந்த 16 சக்கரங்கள் கொண்ட சரக்கு லாரி, கட்டுப்பாட்டை இழந்தது. முன்னால் சென்ற வேன் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதில் வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்தனர். பிரதிஷ்டை செய்ய கொண்டு வந்த துர்கா சிலையும் உடைந்து சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும் காயமடைந்த 21 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.