தேசிய செய்திகள்

ராகுல் காந்தியின் கார் கான்வாய் விபத்து - எஸ்.ஐ.டி விசாரணைக்கு உத்தரவு

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேச மாநிலம் சென்றார். ராகுல் காந்திக்கு எதிராக அமித்ஷா தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்தி சுல்தான்பூர் சென்று கொண்டிருந்தார். லக்னோவில் இருந்து சுல்தான்பூரை நோக்கி பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தார். ராகுல் காந்தி காருக்கு முன்னும் பின்னும் கான்வாய் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

கான்வாயில் விபத்து

அப்போது ராகுல் காந்தியின் வாகனத்துக்கப் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த ஒரு காரின் மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியது. இதன் காரணமாக அடுத்தடுத்து சில வாகனங்கள் மோதிக்கொண்டன. மொத்தம் 4 கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கி உள்ளன. இந்த விபத்தில் ராகுல் காந்தியுடன் பயணித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேர்ந்தபோது ராகுல் காந்தியின் வாகனம் வெகு தொலைவில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் ராகுல் காந்தியின் கார் கன்வாயில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விபத்து குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உத்தரபிரதேச டிஜிபி உத்தரவிட்டுள்ளார். லக்னோ மண்டல ஐ.ஜி. கிரண் தலைமையில் 3 பேர் கொண்ட எஸ்.ஐ.டி. அமைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT