புதுடெல்லி,
அறிவுசார் நக்சல் என்பதில் பெருமைப்படுவதாக டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
80-வது சுதந்திர நாள் அன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்களை ஒழிப்பதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், நாட்டில் வன்முறை, அமைதியின்மையை ஏற்படுத்த 'திமாகி நக்சல்கள்' (அறிவுசார் அல்லது கருத்தியல் சார்ந்த நக்சல்கள்) வாய்ப்புகளைத் தேடுகின்றனர். அவர்கள் சமூகத்தைத் தவறான பாதையில் இழுத்து செல்ல விரும்புகின்றனர்" எனப் பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் திமாகி நக்சல்கள் என்ற கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த டெல்லி முன்னாள் முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை ஒரு அறிவுசார் நக்சல் என அறிவிப்பதில் பெருமை கொள்வதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இன்று அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் உயிரோடு இருந்திருந்தால் பிரதமர் மோடியின் கூற்றுப்படி அவர்களும் ‘அறிவுஜீவி நக்சல்கள்' என்றுதான் அழைக்கப்பட்டிருப்பார்கள்.
பிரதமர் மோடியின் கூற்றுப்படி, இந்நாட்டில் எதிர்த்து கேள்வி கேட்க துணிச்சல் உள்ளவர்கள் திமாகி (அறிவுஜீவி) நக்சல்கள்தான். அவ்வகையில் நானும் அறிவுஜீவி நக்சல் என்பதில் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரான ப. சிதம்பரம், பிரதமர் மோடி கருத்துகளை விமர்சித்து, "நான் ஒரு 'அறிவுசார் நக்சல்' என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.