தேசிய செய்திகள்

பிரதமர் வேண்டுகோளுக்கு ஏற்ப... அரசு பஸ்சில் பயணித்த டெல்லி மந்திரி

குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், நான் ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக, ரெயில், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்வேன் என இன்று கூறினார்.

புதுடெல்லி

மேற்காசிய போரால் ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்தது. இந்த பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் கடந்து செல்ல கூடிய நிலையில், ஈரான் நடவடிக்கையால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை, 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இதனால் உலகளாவிய அளவில் எரிபொருள் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பேசும்போது, நாட்டு மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இந்திய பொருளாதாரம் வலுப்படுவதற்காகவும், அந்திய செலாவணி இருப்பை பாதுகாக்கும் நோக்கிலும் இத்திட்டங்களை அவர் கூறினார். வீட்டில் இருந்து பணிபுரிதலை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு பயணம் தவிர்க்கும்படியும், ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும், எரிபொருள் நுகர்வை குறையுங்கள் என்பன உள்பட பல்வேறு விசயங்களை பற்றியும் அவர் பேசினார்.

இதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க சிறப்பு பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தன்னுடைய பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதிக்கும் கீழாக குறைத்திருக்கிறார்.

இந்த நிலையில், 2 பாதுகாப்பு வாகனங்களுடன் அமைச்சரவை கூட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவருடைய வாகனம் மற்றும் அவருடன் பாதுகாப்பு வாகனம் ஒன்று என மொத்தம் 2 வாகனங்களே சென்றுள்ளன. இதனால், எரிபொருள் சிக்கனம் என பேசியதுடன் நில்லாமல், பிரதமர் மோடி அதனை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்.

இந்த சூழலில், டெல்லி போக்குவரத்து துறை மந்திரி டாக்டர் பங்கஜ் குமார் சிங் பஸ்சில் இன்று பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு ஏற்ப, டெல்லி மக்கள், பயணம் செய்வதற்கு பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்த வேண்டும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு டெல்லி போக்குவரத்து அமைச்சகம் அனைத்து வித வசதிகளையும் வழங்க தயாராக உள்ளது என்று கூறினார்.

குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத் கூறும்போது, நான் ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக, ரெயில், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்வேன் என இன்று கூறினார்.