தர்மஸ்தலா,
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலா மண்டை ஓடு வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மஸ்தலாவில் பல ஆண்டுகளாக நடந்ததாக கூறப்பட்ட மர்ம மரணங்கள் மற்றும் ரகசியமாக புதைக்கப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முதலில் பல அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பின்னர் சில ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், இந்த முழு விவகாரமும் சுமார் ரூ.200 கோடி செலவில் நடத்தப்பட்ட ஒரு பெரிய சதித் திட்டமாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரத்தை பரப்புவதில் நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில முக்கிய நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பதை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அளித்துள்ள அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள தர்மஸ்தலா வழக்கு, மேலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தற்போது அனைவரின் பார்வையும் சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையையும், நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் நோக்கி திரும்பியுள்ளது. அதே நேரத்தில், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டவையே தவிர, இன்னும் நிரூபிக்கப்படவில்லை.