தேசிய செய்திகள்

நடிகர் சலீம் குமார் மறைவு: கேரள முதல்-மந்திரி இரங்கல்

சலீம் குமாரின் மறைவு மலையாள திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொச்சி,

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும், தேசிய விருது பெற்ற கலைஞருமான சலீம் குமார்(56) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு மலையாள திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழப்பு

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சலீம் குமார், தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரங்கல்

இந்த நிலையில், கேரள முதல்-மந்திரி வி.டி. சதீசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பாதாவது:-

‘எனக்கு அவர் வெறும் நகைச்சுவையின் இளவரசர் மட்டுமல்ல, ஆழமான பிணைப்புள்ள ஓர் ஆன்மா, தனது அரசியல் நம்பிக்கைகளில் அச்சமற்றவர்.

காங்கிரஸ் உடன் நிற்பதாகக் கூறுவதில் பெருமிதம் கொண்டவர். ஒரே முகத்தால் நம்மைச் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய ஒரு பன்முக மேதை. மலையாளத் திரையுலகம் ஒரு ஜாம்பவானை இழந்துவிட்டது.’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.