தேசிய செய்திகள்

அமெரிக்க பங்குச்சந்தையின் வக்கீல் நோட்டீசை ஏற்க அதானி சம்மதம்

தவறான தகவல்களுடன் முதலீட்டாளர்களை திசைதிருப்பி முதலீடு திரட்டப் பட்டதாக புகார் எழுந்தது.

புதுடெல்லி,

பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, அதானி கிரீன் எனர்ஜி என்ற சூரிய மின்உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் பெறுவதற்கு மாநில அரசுகளுக்கு 26 கோடியே 50 லட்சம் டாலர் (சுமார் ரூ.2,400 கோடி) லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இந்த ஒப்பந்தங்களை காண்பித்து, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அமெரிக்காவில் முதலீட்டாளர்களிடையே முதலீடு திரட்டியது. லஞ்சம் கொடுக்கப்பட்டதை மறைத்து, தவறான தகவல்களுடன் முதலீட்டாளர்களை திசைதிருப்பி முதலீடு திரட்டப் பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கவுதம் அதானி, அவருடைய உறவினர் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்காவில் புரூக்ளின் நகரில் உள்ள கோர்ட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் வழக்கு தொடர்ந்தது. அத்துடன், இந்தியாவில் ரூ.2 ஆயிரத்து 400 கோடி லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அரசு வக்கீல்கள் மற்றொரு வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், அதானியும், சாகர் அதானியும் இந்தியாவிலேயே இருந்து விட்டதால், அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையத்தால் அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்க முடியவில்லை. அதனால் இவ்வழக்கு ஓராண்டுக்கு மேலாக முடங்கிக் கிடந்தது.

வக்கீல் நோட்டீஸ் வழங்க மாற்று வழிமுறைகளை கையாளுமாறு கோர்ட்டை அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், புரூக்ளின் கோர்ட்டில் அதானியின் வக்கீல்கள் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையத்தின் வக்கீல் நோட்டீசை ஏற்க அதானியும், சாகர் அதானியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டால், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையம் வழக்கை முன்னெடுத்து ெசல்லும். 90 நாட்களுக்குள் அதானி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி அனுமதி அளிப்பார். அதற்கு ஆணையம் 60 நாட்களுக்குள் ஆணையம் எதிர்மனு தாக்கல் செய்த பிறகு, அதானி 45 நாட்களுக்குள் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிகரெட், புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி: இன்று முதல் அமல்

இன்று மத்திய பட்ஜெட்: தமிழ்நாட்டுக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகுமா?

தமிழக சட்டமன்ற தேர்தல்: ‘இலவசம்’ வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பிரதமர் மோடி இன்று வரும் நிலையில் சீக்கிய அமைப்புக்கு வெடிகுண்டு மிரட்டல்

இன்று பட்ஜெட் தாக்கல்: மாநில அரசுகள் பதற்றத்துடன் காத்திருக்கின்றன - காங்கிரஸ்