தேசிய செய்திகள்

நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

வரும் 21ம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் (யுஜி) தேர்வில், தேர்வர்களுக்கு உகந்த சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

நீட் மறு தேர்வு

வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த சூழலில் வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாற்றங்கள்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய தேர்வு முகமை (NTA), நீட் (யுஜி)-2026 தேர்வானது நியாயமான, பாதுகாப்பான மற்றும் தேர்வர்களின் தேவைகளுக்கு ஏற்ப நடத்தப்படும் விதத்தில் நடைபெறுவதை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2026 ஜூன் 21ம் தேதி அன்று நடைபெற உள்ள நீட் (யுஜி) 2026 தேர்வில், தேர்வர்களுக்கு உகந்த சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

15 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்

பல ஆண்டுகளாக தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், தேர்வுக்கான கால அவகாசம் 195 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேர்வுகள் இனி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடைபெறும்.

வருகைப் பதிவேடுகளில் கையொப்பமிடுதல் மற்றும் பிற கண்காணிப்பு நடைமுறைகள் போன்ற கட்டாயத் தேர்வு முறைகளுக்குத் தேவைப்படும் நேரமும் இதில் அடங்கும். திருத்தப்பட்ட இந்த தேர்வு கால அவகாசமானது, நிர்வாக செயல்முறைகள் தேர்வெழுதும் வாய்ப்பை தடுத்துவிடுகின்றன என்ற உணர்வின்றி, தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதற்கான இடம் அதிகரிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் மறு தேர்வு வினாத்தாளும் கசிந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனை திட்டவட்டமாக மறுத்த தேசிய தேர்வு முகமை, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.