தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிடுங்கள்: மம்தா பானர்ஜிக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அழைப்பு

காங்கிரசில் மீண்டும் இணையுமாறு மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்காள காங்கிரஸ் மூத்த தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மம்தா தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் பிளவு

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 1998-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அவரது கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டது. இருப்பினும், தேசிய அளவில் காங்கிரஸ் இடம்பெற்ற 'இந்தியா' கூட்டணியில் உள்ளது.

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோற்றதால், அக்கட்சியில் பிளவு வெடித்துள்ளது. 6-ந் தேதி நடைபெற உள்ள நந்திகிராமம் தொகுதி இடைத்தேர்தலில், தனது கட்சி வேட்பாளர் விலகியதால், காங்கிரஸ் வேட்பாளருக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இணைய வேண்டும்

இந்நிலையில், மேற்கு வங்காள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மம்தா பானர்ஜிக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தனிக்கட்சியாக இயங்க வேண்டிய தேவை இல்லை. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அக்கட்சியில் பெரிதாக எதுவும் இல்லை.மம்தா பானர்ஜி, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தஞ்சம் அடைந்துள்ளார். அதுபோல், அவர் மீதி இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் மீண்டும் இணைய வேண்டும். அவர் தனது மூட்டை முடிச்சை (அபிஷேக் பானர்ஜி) விட்டுவிட்டு, இணைய வேண்டும்.

வேட்பாளருக்கு ஆதரவு

காங்கிரஸ் மேலிடம் இதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மம்தா காங்கிரசில் இணைந்தால், மேற்கு வங்காளத்தில் அவரது தலைமையை ஏற்று, அவரின் கீழ் பணியாற்ற தயாராக உள்ளோம்.நந்திகிராமில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பதுபோல், ரெஜிநகரிலும் அதே ஆதரவை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலிடம் அழைத்தால் பரிசீலனை

அவரது அழைப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் கூறியதாவது:-ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதுபற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து இத்தகைய அழைப்பு வந்தால், கட்சியில் அதுபற்றி விவாதிப்போம்.அபிஷேக் பானர்ஜியை விட்டுவிட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். அவர் எங் கள் தலைவர், தேசிய பொதுச்செயலாளர்.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT