செபஹிஜாலா,
திரிபுராவில் உள்ள இனப்பெருக்கப் பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, திரிபுரா அரசு, காய்ச்சல் பாதித்த பன்றிகளை மொத்தமாக கொல்ல உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவின் செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள தேவிபூரில் அரசு இனப்பெருக்கப் பண்ணை உள்ளது. இங்கு உள்ள பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றிகளை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வள மேம்பாட்டுத் துறை மந்திரி பகபன் தாஸ் நேற்று தெரிவித்தார்.
இறந்துபோன பன்றிகளின் உடல்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் உயிருடன் இருக்கும் பன்றிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பண்ணையில் ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. இதனால் ரூ.20 முதல் 22 லட்சம் வரை இழப்பு ஏற்படும் என்று கூறிய அவர், மேலும் மூத்த அதிகாரிகள் அனைவரும் ஒரு நிகழ்ச்சிக்காக குஜராத் சென்றுள்ளதாகவும் விரைவில் அவர்கள் வந்து சேர்ந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.