தேசிய செய்திகள்

குழந்தைகள் விற்பனை விவகாரம்: குழந்தை பராமரிப்பு இல்லங்களில் சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் நாட்டிலுள்ள மிஷனரீஸ் ஆப் சேரிட்டி குழந்தை பராமரிப்பு இல்லங்களில் ஆய்வு நடத்த மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரவிட்டு உள்ளார்.

புதுடெல்லி

ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி அறக்கட்டளையின் கீழ் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகம் குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, திருமணம் ஆகாமல் சிறுவயதிலேயே தாயான சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவு அளிக்கிறது.

இந்த குழந்தைகள் காப்பகத்தில் இருந்து பச்சிளம் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு ரூ.1 லட்சம் வரை பெறப்படுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி அறக்கட்டளையின் தலைவியான கன்னியாஸ்திரி கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளை தலா ரூ.50 ஆயிரம் வீதம் 3 தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். காப்பகத்தில் இருந்து குழந்தைகளை வாங்கி சென்ற தம்பதிகளின் விவரங்கள் குறித்து அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குழந்தை விற்பனையில் ஊழல் நடந்ததை தொடர்ந்து மகளிர் மற்றும் குழந்தை நல மேம்பாட்டு மத்திய அமைச்சர் மேனகா காந்தி செவ்வாயன்று நாடு முழுவதும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி மூலம் இயங்கும் குழந்தை பராமரிப்பு இல்லங்களில் ஆய்வு நடத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மாநில அரசுகள் அனைத்தும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களையும் (CCI) பதிவு செய்து அவற்றை அடுத்த மாதத்திற்குள் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்திற்குள் (CARA) இணைக்க வேண்டும் என கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT