ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி கடந்த ஆண்டு இதே தேதியில் (12.06.2025) எந்த ஆரவாரமும் இல்லாமல், வழக்கம் போல புறப்பட்டது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 787-8 டிரீம் லைனர் ரக விமானம் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சாமானியர்கள், விமானி, துணை விமான என 242 பேர் அந்த விமானத்தில் ஏறினர். அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், தங்கள் உறவினர்கள் விமானத்தில் ஏறும் காட்சியை பார்த்து கையசைத்தபடி இருந்தனர்.
பிற்பகல் 1.41 மணிக்குள் முறையான டிக்கெட் பரிசோதனையை முடித்து, விமானம் ஓடுதளத்தில் ஓடி, வானில் பறப்பதற்கு மேல் எழும்பியது. வான் நோக்கி மேல் எழுந்த சுமார் 32 வினாடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்துக்கு அருகில் இருந்த பி.ஜே.மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்பை கக்கி விபத்துக்குள்ளானது. இதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் உள்ளிட்ட 241 பேர், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இருந்த 19 பேர் என 260 பேர் பலியானார்கள். இதில் அந்த விமானத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் விபத்துக்கு சில நொடிக்கு முன்னதாக அதில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்திய விமான போக்குவரத்து வரலாற்றிலேயே இப்படி ஒரு மிகவும் துயரமான சம்பவம் நடந்தது இல்லை என்ற மோசமான வரலாற்றை இந்த விபத்து பதிவு செய்தது.
விபத்து நடந்த 3 நிமிடங்களிலேயே மீட்பு பணி தொடங்கப்பட்டது. சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ்கள் விரைய, மீட்பு படை வீரர்கள் களத்தில் குதிக்க என அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. விபத்து நடந்த இடத்தில் சுமார் 1,000 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் வெளியாகியதாகவும், அந்த வெப்பத்தின் உள்ளே விமான பயணிகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும் விபத்து நடந்த சில நிமிடங்களில் மீட்பு பணிக்கு சென்றவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த கோர நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகியும் நெஞ்சை விட்டு அகலாத துயரமாகவே இன்றளவும் இருக்கின்றன. அதிலும் விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் உடலை மீட்பு குழுவினர் மீட்டு வந்த துயரமான காட்சி இன்றும் அந்த பணியில் ஈடுபட்டவர்களையும், அதனை கண்டவர்களையும் ஆழமாக பாதித்திருக்கிறது.
விமானத்தில் இருந்த பயணிகளின் உடல் கருகிப்போன நிலையில், விமானம் மோதிய கட்டிடத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதில் வேகம் காட்டினர். அந்த வகையில் 70 பேர் வரை காப்பாற்றப்பட்டனர். விபத்து நடந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் விமான விபத்து விசாரணை நிறுவனம் (ஏ.ஏ.ஐ.பி) தனது இறுதி அறிக்கையை வெளியிட தயாராகி வருகிறது.
விமானம் 'டேக்-ஆப்' ஆன 3 வினாடிகளிலேயே அதன் இருஎன்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ரன்னில் இருந்து கட்-ஆப் நிலைக்கு மாறியதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுபைலட்டுகளின் தவறா அல்லது விமானத்தின் மின்சாரத்தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த இறுதி தகவல் அந்த அறிக்கையில் தான் வெளிப்படும்.
விபத்து நடந்து காலம் ஓராண்டு கடந்திருக்கலாம்; ஆனால், அன்பானவர்களைப் பறிகொடுத்த குடும்பங்களின் கண்ணீரும், ஆமதாபாத் வான்பரப்பில் உறைந்த மரண ஓலமும் இன்னும் ஓயவில்லை.