தேசிய செய்திகள்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா..? - நிபுணர்கள் அச்சம்

செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் குறிப்பிட்ட பணிகளை தாமாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகின்றன.

புதுடெல்லி,

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி சமூகத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.

ஏ.ஐ. பயன்பாடு அதிகரிப்பு

இதுதொடர்பாக புளூம்பெர்க் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

பல ஆண்டுகளாகவே தொழில்நுட்பத் துறை தலைவர்களும், செயற்கை நுண்ணறிவுதுறையில் உள்ள சிலரும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஒருநாள் மனிதர்களின் கட்டுப்பாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று எச்சரித்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறினால், அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது கடினமாகலாம் என்றும், அதன் மூலம் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

புதிய கவலைகள்

ஒரு காலத்தில் அறிவியல் திரைப்படங்களில் மட்டுமே காணப்பட்ட செயற்கை நுண்ணறிவு, தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்கள், கணினிகள் உள்ளிட்ட சாதனங்களிலும் இடம்பெற்றுள்ளது. பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதே வேகத்தில் வளர்ந்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாதுகாப்பு பிரச்சினை

செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்கள் குறிப்பிட்ட பணிகளை தாமாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படுகின்றன. இதனால் அவற்றுக்கு வழங்கப்படும் அணுகல், அனுமதிகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது முக்கியமான பாதுகாப்பு பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த அச்சத்தின் காரணமாக, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை தற்காலிகமாக குறைப்பது குறித்து முன்வந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து வேகமாக முன்னெடுப்பதற்கு பதிலாக, அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், தேவையான பாதுகாப்பு முறைகளை உருவாக்குவதற்கும் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

உரிய கட்டுப்பாடுகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டுக்கு அரசு சார்பில் உரிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு மனிதர்களுக்கு பயனளிக்கும் வகையில் தொடர்ந்து வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில், அதன் வளர்ச்சியால் ஏற்படக் கூடிய அபாயங்களை முன்கூட்டியே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் மறுபுறம் வலுப்பெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT