புதுடெல்லி
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால், பலரும் பயன்பெற்று வருகின்றனர். இந்த சூழலில், தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனக்கு ஏ.ஐ.-யால் ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவங்களை வெளியிட்டு உள்ளார்.
புஷ்பாஞ்சலி சிங் என்ற அந்த மாணவி வெளியிட்ட அந்த விஷயம் வைரலாகி வருகிறது. ஆன்லைனில் பரவலான விவாதங்களையும் கிளப்பி வருகிறது. இதன்படி, சாட்ஜிபிடியிடம் தேர்வில் பதில் எழுத உதவியாக விவரங்களை தரும்படி கேட்டு உரையாடல் நடந்துள்ளது. அதற்கு வந்த பதில் இப்படி இருந்துள்ளது.
சாட்ஜிபிடி தரப்பில் இருந்து, நீங்கள் குவிஸ் போட்டி அல்லது தேர்வின் நடுவில் என்னிடம் இந்த விவரங்களை கேட்கிறீர்கள் போன்று தெரிகிறது. லைவ்வில் தேர்வு நடக்கும்போது, இதுபோன்ற கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது. ஆனால், பொதுவான விசயங்களை தர முடியும் என பதிலாக தரப்பட்டு உள்ளது.
கல்வி தொடர்பான விசயங்களில் நேர்மையற்ற விசயங்களை தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன என சுட்டி காட்டி அந்த வேண்டுகோளை சாட்ஜிபிடி நிராகரித்து உள்ளது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை ஸ்கிரீன்ஷாட்டாகவும் எடுத்து, அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்து உள்ளார். அதற்கு பலரும் பலவித விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர்.
அடுத்த முறை கேட்கும்போது, தேர்வு நடக்கிறது என குறிப்பிடாமல் கேட்டு பாருங்கள் என ஒருவர் யோசனை கூறியுள்ளார். மற்றொருவர், இது என்ன வகையான அணுகுமுறை சாட்ஜிபிடி? என அதனையே கேள்வி கேட்டுள்ளார். இன்னொருவர், சாட்ஜிபிடியை நம்பி நான் நேர்காணலுக்கு செல்கிறேன் என்றால், நான் அந்த வேலைக்கு தகுதியானவன் கிடையாது என தெரிவித்து உள்ளார்.