புதுடெல்லி,
மேற்கு ஆசிய போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதன் விளைவாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் செலவுககளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றன.
அந்த வகையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் கடந்த மே மாதத்தில் சுமார் 90 தினசரி விமான சேவைகளை குறைத்தது. கடந்த நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் விரிவான செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போது மேலும் சில விமான சேவைகளை குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
அதன்படி, வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சர்வதேச விமான சேவைகளை குறைக்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்காசிய போர் சூழல், வான்வெளி கட்டுப்பாடுகள், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், விமான சேவைகள் குறைக்கப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் 1,200-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.