புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பயணிகள் சொந்த வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மெட்ரோ ரெயில்களில் கூடுதலாக 20 சேவைகளை இயக்க டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்.) காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் கிராப்-1 நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, நாளை (அக்டோபர் 22) முதல் வார நாட்களில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை, டெல்லி மெட்ரோ ரெயில் சேவைகளில் கூடுதலாக 20 முறை ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தூசி மற்றும் காற்று மாசுவைக் குறைக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.கட்டுமானப் பகுதிகளில் தூசியைக் கட்டுப்படுத்துதல், சுற்றியுள்ள சாலைகளில் படிந்துள்ள தூசியை அகற்றுதல், நடைபாதைகள் மற்றும் சாலைத் தடுப்புப் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
மேலும், கட்டுமானப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முறையாக மூடப்பட்டுள்ளனவா என்பதையும், கட்டுமானப் பணிகள் முடிந்து வெளியேறும் வாகனங்களின் சக்கரங்களைக் கழுவுவதற்கான வசதிகள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் மெட்ரோ பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள்.டெல்லியில் மெட்ரோ கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 31 கி.மீ. சாலைகள் தற்காலிகமாக மெட்ரோ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சாலைகள் தூசி மாசுவைக் குறைக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கட்டுமானப் பகுதிகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட புகைமூட்ட எதிர்ப்பு கருவிகள் மற்றும் நீர்த்துளிகளைப் பீய்ச்சியடிக்கும் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது