தேசிய செய்திகள்

‘இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்’ - மத்திய அரசு

மோதலில் இதுவரை இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

சுமார் 3 வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் இந்த போரில், ஈரான் முற்றிலும் சீரழிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஈரானின் கடற்படை, விமானப்படை அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனாலும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக இஸ்ரேலின் அரணாக விளங்கும் 'அயர்ன் டோம்' பாதுகாப்பு அம்சத்தை தாண்டி, ஈரானின் ஏவுகணைகள் மற்றும் கொத்துக்குண்டுகள் அந்த நாட்டை பதம் பார்த்து வருகின்றன. இதில் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“இஸ்ரேலில் உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்தியர் ஒருவர் காயமடைந்ததாக தகவல்கள் உள்ளன. காயமடைந்த நபர் தற்போது பாதுகாப்பாக உள்ளார். இந்த மோதலில் இதுவரை இந்தியர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் ஒருவர் மாயமாகியுள்ளார். இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் நிலவரத்தை கண்காணித்து வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.