தேசிய செய்திகள்

ஹிஜாப்’ அணிய அனுமதி கோரி முஸ்லிம் மாணவி மனு: தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

சீருடை தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கே உள்ளது

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தாகூர் பப்ளிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர சுகைனா ரிஸ்வி என்ற முஸ்லிம் மாணவி விண்ணப்பித்திருந்தார். பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஜே.ஜே. முனீர், இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உத்தரவில் கூறியதாவது: பள்ளிகளில் சீருடை விதிகள் மாணவர்களின் ஒழுக்கத்தையும், பள்ளியின் தனித்துவமான அடையாளத்தையும் பேணுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சீருடை தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கே உள்ளது.தனிப்பட்ட விருப்பம் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் பள்ளியின் சீருடை விதிகளில் இருந்து தனிப்பட்ட விலக்கு கோர முடியாது.

‘மத ரீதியாக கட்டாயம் இல்லை’

மனுதாரர் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்தபோது ஹிஜாப் அணிவதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக, தற்போது அதையும் தொடர அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.பள்ளிகளில் சீருடை நடைமுறைப்படுத்தப்படுவதன் நோக்கம் மாணவர்களிடையே சமத்துவத்தை பேணுவதும், சாதி, மத வேறுபாடுகளை களைந்து மதச்சார்பற்ற சூழலை உருவாக்குவதுமாகும்.வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் தவிர்க்க முடியாத கட்டாய நடைமுறை என்பதற்கோ, அதை அணியாவிட்டால் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கோ போதுமான ஆதாரங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை.எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். அதில், ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் தவிர்க்க முடியாத மத நடைமுறை அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.