ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் பல லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை 57 நாட்கள் நடைபெற உள்ளது. இதன்படி ஜூலை 3-ந்தேதி(நாளை) அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த அமர்நாத் யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பல்தால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 28-ந்தேதி முடிவடையும்.
இதில் நுன்வான்-பஹல்காம் பாதை சுமார் 48 கி.மீ. தூரம் கொண்டது. அதே சமயம், பல்தால் பாதை தூரம் குறைவானது(14 கி.மீ.), ஆனால் செங்குத்தான மலைப்பாதைகளைக் கொண்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள பாகவதி நகர் பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் இன்று அமர்நாத் யாத்திரைக்காக புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், பயணம் தொடங்குவதற்கு முன்பு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. யாத்திரை செல்லும் பக்தர்கள் உற்சாகமாக பக்தி கோஷங்களை எழுப்பியபடி யாத்திரைக்கான பயணத்தை தொடங்கினர்.
அவர்களது வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதே போல், அமர்நாத் யாத்திரை தொடங்கக் கூடிய பஹல்காம் மற்றும் பல்தால் ஆகிய பகுதிகளிலும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு முகமைகள் சார்பில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி யாத்திரை மேற்கொள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று முதல் 28-ந்தேதி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.