இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூரில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக உள்ளது. எனவே, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களிடையே மெட்ரோ ரெயில் பயணம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் புதிய முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
‘சக்கரங்களில் கொண்டாட்டங்கள்' எனும் இந்த முயற்சியின் கீழ், மெட்ரோ ரெயில் பெட்டிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரெயில் நிலைய வளாகத்தில் கட்டண அடிப்படையில் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆக்கப்பூர்வமான மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
“இந்தூர் மற்றும் போபாலின் துடிப்பான கலாச்சாரம், வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற சூழல் மற்றும் குடிமக்களின் மாறிவரும் வாழ்க்கை முறைகளை கருத்தில் கொண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது," என்று மெட்ரோ நிர்வாக இயக்குனர் எஸ். கிருஷ்ண சைதன்யா கூறினார்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் ரெயில் நிலைய வளாகங்களில் திரைப்பட படப்பிடிப்புகள், இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், விளம்பர தயாரிப்புகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணத்திற்கு முந்தைய புகைப்பட பதிவுகள், ஒளிப்பதிவு மற்றும் பிற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் நிலையத்தில் நிற்கும் ஒரு மெட்ரோ பெட்டிக்கு மணிக்கு ரூ. 5,000 கட்டணமும், இயங்கிக்கொண்டிருக்கும் ரெயில்களில் ஒரு பெட்டிக்கு மணிக்கு ரூ. 7,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பதிவுகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சமாக 50 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்றும், கூடுதல் நபர்களுக்கான கட்டணங்கள் மாறுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்."
பொதுமக்கள் தாங்கள் நடத்தவிருக்கும் நிகழ்ச்சிகளுக்காக, ஒவ்வொரு மெட்ரோ பெட்டிக்கும் ரூ. 20,000 பிணை தொகையாக செலுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பிறகு, மெட்ரோவின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், அந்தத் தொகை மீண்டும் திரும்ப தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்வின் சிறப்பு நிகழ்வுகளை மெட்ரோவின் பாதுகாப்பான மற்றும் நவீன சூழலில் கொண்டாடி மகிழ முடியும்.