தேசிய செய்திகள்

சர்வதேச எல்லை அருகே உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து அகற்ற அமித்ஷா உத்தரவு

ஒவ்வொரு எல்லை மாவட்டத்திற்கும் முழுமையான பாதுகாப்பு அரணை உருவாக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் பைகானேர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கான காரணங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளவும், இந்தப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்காத வகையில் நீடித்த தீர்வுகளை உருவாக்கவும் எல்லை மாவட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிமக்கள், அரசு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு முகமைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான பாதுகாப்பு அரணை ஒவ்வொரு எல்லை மாவட்டத்திற்கும் உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். அதோடு, சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அவற்றை இடித்து அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், எல்லைப்புற கிராமங்களுக்கு அனைத்து அரசுத் திட்டங்களும் 100 சதவீதம் சென்றடைவதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்திய அமித்ஷா, இணையவழி குற்றங்களை கையாள்வதற்கு '1930' உதவி மையத்தை திறம்பட பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.