தேசிய செய்திகள்

சட்டவிரோத குடியேற்றத்தை கண்டறிய கள ஆய்வு - அமித்ஷா உத்தரவு

சட்டவிரோத குடியேற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

புதுடெல்லி,

நாட்டின் எல்லைப்புற மாவட்டங்கள், பெருநகரங்கள் மற்றும் தொழில் நகரங்களில் நிகழும் அசாதாரண மக்கள் தொகை இடப்பெயர்வு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இது போன்ற இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்களை அறிவியல் பூர்வமாக மதிப்பிட, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவோலேகர் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அமைத்தது. இக்குழுவில் மக்கள்தொகை கணக் கெடுப்பு ஆணையர் மிருதுஞ்செய்குமார் நாராயண், பொருளாதார நிபுணர் ஷாமிகா ரவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, எல்லைப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்கு நேரில் சென்று களப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யுமாறு குழுவினருக்கு அவர் உத்தரவிட்டார்.

சட்டவிரோத குடியேற்றம், எல்லை தாண்டிய நடவடிக்கைகள் மற்றும் சமூக-பொருளாதார காரணிகள் குறித்து இந்தக் குழு அளிக்கும் விரிவான பரிந்துரைகளின் அடிப்படையில், இடப்பெயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்ட, நிர்வாகக் கொள்கைகளை மத்திய அரசு உருவாக்க திட்ட மிட்டுள்ளது.

SCROLL FOR NEXT