தேசிய செய்திகள்

ரூ.182 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - அமித்ஷா பெருமிதம்

மிகப்பெரிய கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்தி, விழிப்புடன் செயல்பட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

புதுடெல்லி,

இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்பதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பாதுகாப்பு முகமைகள் இணைந்து நடத்திய ஆபரேஷன் ரேஜ்பில் (Operation RAGEPILL) என்ற அதிரடி சோதனையின் மூலம், இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ‘காப்டகன்’ எனப்படும் போதைப்பொருள் பெரும் அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் "ஜிஹாதி" என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 182 கோடி ஆகும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டுச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுள்ள 'பூஜ்ஜியம் சகிப்புத்தன்மை' கொள்கைக்கு இந்த நடவடிக்கை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று உள்துறை மந்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "இந்திய எல்லைக்குள் நுழையும் அல்லது இந்தியாவின் நிலப்பகுதியை ஒரு போக்குவரத்துப் பாதையாகப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் ஒவ்வொரு கிராம் போதைப்பொருளையும் நாங்கள் முற்றிலும் ஒடுக்குவோம்" எனத் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். மேலும், இந்த மிகப்பெரிய கடத்தல் கும்பலை தடுத்து நிறுத்தி, விழிப்புடன் செயல்பட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்குத் தனது மனமார்ந்த பாராட்டுக்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.