தேசிய செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 88 வயது கோவில் யானை மரணம்

ஆசியாவிலேயே மிகவும் வயதான, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த 88 வயது கோவில் யானை மரணம் அடைந்தது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பல கோவில்களில் சாமி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக அந்த கோவில்களுக்கு யானைகளை பலரும் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். பலர் வீடுகளிலும் அரசின் அனுமதி பெற்று யானைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெண் யானை ஒன்று, திருவனந்தபுரம் அருகே பாப்பனம்கோட்டில் உள்ள பராமரிப்பு மையத்தில் வளர்க்கப்பட்டு வந்தது. தாட்சாயனி என பெயரிடப்பட்ட இந்த யானை பல்வேறு கோவில் விழாக்கள் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் ஆராட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்று வந்தது.

88 வயதான தாட்சாயனி ஆசியாவிலேயே மிகவும் வயதான காப்பக யானை என்ற பெருமையை பெற்றிருந்தது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டு கஜா முத்தச்சி (மூதாட்டி யானை) என்ற பட்டம் பெற்ற தாட்சாயனி, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்து இருந்தது. இந்த யானையின் நினைவாக சிறப்பு தபால் உறை ஒன்றும் வெளியிடப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டு இருந்தது.

முதுமை காரணமாக சமீப காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த தாட்சாயனி, நேற்று முன்தினம் மரணமடைந்தது. அதன் இறுதிச்சடங்குகள் நேற்று நடந்தது. பெண் யானை தாட்சாயனியின் மரணம் பக்தர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.