விபத்து 
தேசிய செய்திகள்

ஆந்திரா: ஆட்டோ மீது லாரி மோதி விபத்து; திருமண கோஷ்டியை சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் பலி

மணமகள் மற்றும் சிலர் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் சென்றிருந்தனர்.

அமராவதி,

ஆந்திராவில் திருமணத்திற்காக ஆட்டோவில் சென்ற குழந்தை உட்பட 4 பேர் மீது லாரி மோதி அனைவரும் பலியாகினர்.

மணமகள் பிரார்த்தனை

ஆந்திர மாநிலம், மர்காபூர் மாவட்டம் கிடலூர் பகுதியைச் சேர்ந்தவர் அவூலா வீரக்கா . இவருக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணியளவில் கம்பம் பகுதியில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக மணமகள் மற்றும் அவரது உறவினர்கள் 14 பேர் ஆட்டோ மூலம் கிடலூரில் இருந்து கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் திருமணத்திற்கு முந்தைய சடங்கின்படி பிரார்த்தனை செய்வதற்காக அதிகாலை சுமார் 1:15 மணியளவில் ஆட்டோவை கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சுவாமி கோவில் அருகே சாலையோரம் நிறுத்தியுள்ளனர். மணமகள் மற்றும் சிலர் பிரார்த்தனை செய்வதற்காக கோவிலுக்குள் சென்றிருந்தனர்.

அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ

அந்த நேரத்தில், மதனப்பள்ளியில் இருந்து வைரா நோக்கித் தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அதிவேகமாக வந்தது. இதையடுத்து லாரி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மற்றும் அங்கிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஆட்டோ முழுவதும் நசுங்கி அப்பளம்போல் நொறுங்கியது.

உயிரிழப்பு

மேலும் மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்த அவூலா நாஹலட்சுமி (வயது 4) குழந்தை உட்பட அவூலா அங்காலு (வயது 22), அலகநந்தா எல்யாஸ் அஞ்சம்மா (வயது 18), அவூலா நாகேஷ் (வயது 18) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் மணப்பெண்ணின் தாய் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பதற்றம் அடைந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடினார். மேலும் மணமகள் கோவிலுக்குள் இருந்ததால் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மீட்பு

இது குறித்து தகவல் அறிந்த கம்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே, பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு மர்காபூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக ஒங்கோல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மேலும் போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஓட்டுநர் கைது

பின்னர் தப்பியோடிய ஓட்டுநரை போலீசார் மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஓட்டுநரின் அஜாக்கிரதை மற்றும் அதிவேகமே விபத்திற்குக் காரணம் என தெரியவந்தது.

மகிழ்ச்சியாக நடக்கவிருந்த திருமண வீடு, சில நிமிடங்களில் மரண ஓலமாக மாறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.