பாம்பைக் கொன்ற நாய் 
தேசிய செய்திகள்

ஆந்திரா: வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்

பாம்பைக் கண்டவுடன் ஸ்ரீநிவாஸின் வளர்ப்பு நாயான ‘பாக்ஸர்’ இன நாய், உடனடியாக அதை வழிமறித்துக் குரைத்தது.

அமராவதி,

ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாய் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் கொடிய நாகப்பாம்புடன் போராடி, உரிமையாளரின் குடும்பத்தைக் காப்பாற்றியது.

நள்ளிரவில் நுழைந்த நாகப்பாம்பு

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் காக்கிநாடா மாவட்டம் யு.கோத்தபள்ளி மண்டலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் தனது வீட்டில் 5 பேருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், அருகில் உள்ள காலியிடத்தில் இருந்து சுமார் 5 அடி நீளமுள்ள விஷம் கொண்ட நாகப்பாம்பு ஒன்று இவர்களது வீட்டிற்குள் நுழைய முயன்றது.

ஒரு மணி நேரப் போராட்டம்

பாம்பைக் கண்டவுடன் ஸ்ரீநிவாஸின் வளர்ப்பு நாயான ‘பாக்ஸர்’ இன நாய், உடனடியாக அதை வழிமறித்துக் குரைத்தது. நாய் பாம்பின் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியதால், இரு தரப்பிற்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசுவாசப் போராட்டத்தில், நாய் அந்த நாகப்பாம்பைக் கடித்துக் கொன்றது.

விஷம் ஏறிய நாய் - தீவிர சிகிச்சை

சண்டையின் போது, கோபமடைந்த நாகப்பாம்பு நாயின் வாய் மற்றும் முகப் பகுதியில் பலமுறை கடித்தது. பாம்பு இறந்த சில நிமிடங்களிலேயே விஷம் ஏறி நாய் மயங்கி விழுந்தது. நாய் மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிவாஸ், உடனடியாக அதை மீட்டு காக்கிநாடாவில் உள்ள அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்.

அங்கு மருத்துவர்கள் அதற்குத் தீவிரமாக நச்சுமுறிவு சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, நலமுடன் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தன் குடும்பத்தைக் காக்க உயிரைப் பணயம் வைத்த வளர்ப்பு நாயின் இந்த வீரச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.