திருப்பதி,
யூடியூப் பார்த்து தங்கம் எடுக்கும் ஆசையில் மலை சுரங்கத்தில் சிக்கிய வாலிபரை தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் புச்சிரெட்டி பாலேனியை சேர்ந்தவர் பிரபாகர்ரெட்டி. பள்ளி பாலேனியை சேர்ந்தவர் கிஷ்டய்யா. நண்பர்களான இருவரும் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ராமகிரி மலையில் தங்கசுரங்கம் இருப்பதாக யூடியூப்பில் பார்த்தனர். ராமகிரி மலைக்குசென்றால் எளிதாக தங்கத்தை எடுத்து வரலாம் என திட்டம் தீட்டினர்.
அதன்படி நேற்று முன்தி னம் இரவு 10:30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் ராமகிரி மலைக்கு சென்றனர். யூடியூபில் தங்க சுரங்கம் இருப்பதாக தெரிவித்த இடத்திற்கு சென்றனர். அப்போது பிரபாகர் ரெட்டி கயிறை கட்டி சுரங்கத்திற்குள் இறங்கினார். சுரங்கத்தில் இறங்கிய பிறகு அங்கு காற்று இல்லாமல் இருட்டாக இருந்தது. இதனை கண்ட பிரபாகர் ரெட்டி உயிர் பயத்தில் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார். சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட நண்பரை மீட்க கிஷ்டய்யா பல்வேறு முயற்சிகளை செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனடியாக மலையில் இருந்து இறங்கி ராமகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு இருந்த போலீசாரிடம் தனது நண்பர் தங்கத்திற்கு ஆசைப்பட்டு சுரங்கத்தில் சிக்கிக் கொண்டதாகவும் அவரை காப்பாற்றும் படி போலீசாரிடம் மன்றாடினார்.
போலீசார் தர்மவரத்தில் இருந்து தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். மேலும் உள்ளூர் வாலிபர்களுடன் இணைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பிரபாகர் ரெட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணிக்கு பிரபாகர் ரெட்டி சுரங்கத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இனி யூடியூப் பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இருவரையும் எச்சரிக்கை செய்து போலிசார் அனுப்பி வைத்தனர்.