அமராவதி,
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் பலரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இன்று அந்த பட்டாசு ஆலையில் பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு எரிந்துகொண்டிருக்கும் தீயை போராடி அணைத்து வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில், “காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெமில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருப்பது வருந்தம் அளிக்கிறது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். நிவாரணப் பணிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.” என தெரிவித்துள்ளார்.