தேசிய செய்திகள்

ஆந்திரா: வேட்பு மனு தாக்கலின்போது ஆளுங்கட்சி பெண் வேட்பாளர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

சித்தூரில் தெலுங்கு தேச கட்சி பெண் வேட்பாளரை எதிர்க்கட்சி குண்டர் எப்படி தாக்குகிறார்? என பாருங்கள்.

விசாகப்பட்டினம்

ஆந்திர பிரதேசத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கின. இந்த சூழலில், ஆளும் தெலுங்கு தேச கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது.

வன்முறை சம்பவங்கள்

அப்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இந்நிலையில், இரு கட்சியினரும் ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறினர். இதில், 11 மாவட்டங்களில் 76 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

இதன்படி, மிரட்டல் விடுத்தல், ஆண், பெண் வித்தியாசமின்றி வேட்பு மனுக்களை பறித்து செல்லுதல் உள்பட பல்வேறு தாக்குதல்களும் நடந்துள்ளன. போலீசாரின் நெருக்கடி, போதைப்பொருள் மற்றும் பிற குற்ற வழக்குகளை வைத்து அச்சுறுத்தியதில் பல வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் திரும்பி விட்டனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

வேட்பு மனு தாக்கல்

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்த தெலுங்கு தேச கட்சி, உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் இடையூறு செய்ய எதிர்க்கட்சி முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளுங்கட்சி பெண் வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் எதிர்க்கட்சி அராஜகத்தில் ஈடுபட்டது என்று தெலுங்கு தேச கட்சி தெரிவித்ததுடன், அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அது வைரலாகி வருகிறது.

பெண் வேட்பாளர்

அந்த பதிவில், வாக்கர் உதவியின்றி நடந்து கூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறார் ஒரு பெண். அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்கிறார். ஆனால், அதனை செய்ய விடாமல் வேட்பு மனுக்களை பறிக்க எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர்.

சித்தூரில் தெலுங்கு தேச கட்சி பெண் வேட்பாளரை எதிர்க்கட்சி குண்டர் எப்படி தாக்குகிறார்? என பாருங்கள். உள்ளாட்சி தேர்தலில் தோல்வி தவிர்க்க முடியாதது என உணர்ந்த, ஒய்.எஸ். ஜெகனின் பயத்திற்கு இதுவே சான்று என தெரிவித்து உள்ளது.

SCROLL FOR NEXT