சிக்கஜாலா,
பெங்களூருவில் பெண்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆந்திர வாலிபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் நரேஷ் (வயது 34). இவர் மீது கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பாலியல் துன்புறுத்தல், திருட்டு, கொள்ளை என 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் பெங்களூருவில் உள்ள எலகங்கா மற்றும் ஹுனசமரனஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகளை குறி வைத்து, அங்கு புகுந்து செல்போன்களை திருடுவது மற்றும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிக்கஜாலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு பெண்கள் விடுதிக்குள் நரேஷ் புகுந்துள்ளார். அங்கு இருந்த இளம்பெண் ஒருவரின் செல்போனை பறிக்க முயன்றார். இதில் சுதாரித்துக்கொண்ட அந்த பெண், நரேசை கீழே தள்ளிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம்போட்டு கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து அறைகளில் இருந்த பெண்கள் உடனடியாக அங்கு ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன நரேஷ், அந்த பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து மற்றொரு விடுதிக்கும் சென்ற அவர், அங்குள்ள பெண்களிடமும் இதேபோல் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிக்கஜாலா போலீசார் 2 வழக்குகளும், எலகங்கா போலீசார் 2 வழக்குகளும் பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை உடனடியாக கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா தலைமையிலான தனிப்படை போலீசார் நரேசை வலை வீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின் அடிப்படையில், நரேஷ் இருக்குமிடம் போலீசாருக்கு தெரியவந்தது. அதன்படி நேற்று காலையில் பெங்களூரு ஹுனசமரனஹள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த நரேசை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் நரேஷ் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றார். போலீசார் அவரை விடாமல் விரட்டிச் சென்றனர்.
அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நரேஷ், அருகிலுள்ள பண்ணைக்குள் புகுந்து தப்ப முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா மற்றும் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது நரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ் ஏட்டு சச்சினை சரமாரியாக குத்தினார். இதையடுத்து, நரேசை சரணடையுமாறு எச்சரித்து இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா வானத்தை நோக்கி ஒருமுறை துப்பாக்கியால் சுட்டார். அதையும் மீறி நரேஷ் மீண்டும் போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சுட்ட 2 குண்டுகள் நரேசின் இடது காலில் பாய்ந்தன.
இதில் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்த நரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்த நரேஷ் மற்றும் போலீஸ் ஏட்டு சச்சின் ஆகியோர் அம்பேத்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.