ஆந்திரா,
ஆந்திர மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதே நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இன்று (சனிக்கிழமை) காலை பாடம் நடந்துகொண்டிருந்தபோது, 21 வயது இளைஞர் ஒருவர் ரம்பத்துடன் 10-ஆம் வகுப்புக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு மாணவி ஒருவர் மீது சங்கிலி அறுக்கும் ரம்பத்தால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், மாணவியின் முகம், தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கும் ஏற்பட்டது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின் படி ரப்தாடு கிராமத்தில் உள்ள மாவட்டப் பஞ்சாயத்து உயர்நிலைப் பள்ளியில் காலை சுமார் 10.30 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் இருந்தபோதும், பாடங்கள் நடந்துகொண்டிருந்தபோதும் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் அவசர சிகிச்சைக்காக அனந்தபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ஹேமந்த் என்கிற தும்மு. இவர் தர்மாவரம் நகரை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு பிறகு, அவர் பள்ளியிலிருந்து தப்பிச் சென்றநிலையில், தலைமறைவாக இருந்தார். அவரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த தாக்குதல் மாணவர்கள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் வகுப்பறைக்கு சென்று மாணவியை ரம்பத்தால் தாக்கிய ஹேமந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் நெருங்கிய உறவினரான ஹேமந்தின் காதலை மாணவி நிராகரித்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு, தனது எக்ஸ் பக்கத்தில், “ராப்தாடு மாவட்ட பஞ்சாயத்து உயர்நிலை பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வகுப்பறைக்குள் கொடூரமாகத் தாக்கப்பட்டிருப்பது என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளதுடன், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளுக்குள் நமது இளம் மாணவிகளைக் குறிவைக்கும் தாக்குதல்தாரிகளுக்கு நமது சமூகத்தில் இடமில்லை" என்று பதிவிட்டிருந்தார்.