14 பேனாக்கள், 5 கரண்டிகள் 
தேசிய செய்திகள்

ஆந்திரா: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள் அகற்றம்

உணவு அல்லாத பொருட்களை ஆசையாக சாப்பிடும் ‘பைகா சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை மனநல குறைபாடே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமராவதி,

ஆந்திராவில் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 14 பேனாக்கள், 5 மரத்தில் செய்யப்பட்ட கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

வயிற்று வலி

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 33 வயது பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் துடித்தபடி வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றில் ஏதோ விசித்திரமான பொருட்கள் இருப்பதை ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்டர்கள் அதிர்ச்சி

இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தி ஆகியவற்றை டாக்டர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இதில் ஒரு பேனாவின் மூடி இல்லாததால், அது குத்தி அந்த பெண்ணுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

விசித்திர பொருட்கள்

உணவு அல்லாத பொருட்களை ஆசையாக சாப்பிடும் ‘பைகா சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை மனநல குறைபாடே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விசித்திர பொருட்கள் அனைத்தையும் அந்த பெண் எப்படி விழுங்கினார் என்பது குறித்து டாக்டர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT