தேசிய செய்திகள்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; வினோத் ஆர்யாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பெற்றோர் வலியுறுத்தல்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கு; வினோத் ஆர்யாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பெற்றோர் வலியுறுத்தல்

டேராடூன்

அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், வினோத் ஆர்யாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என அங்கிதாவின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் பவரி ஹர்க்வல் மாவட்டத்தின் ரிஷிகேஷ் அருகே வனந்த்ரா என்ற பெயரில் செயல்பட்டு வந்த சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி (வயது 19) என்ற இளம்பெண் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை.

சொகுசு விடுதி

இதுபற்றி அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா ஆகியோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன இளம்பெண் அங்கிதாவை தேடி வந்தனர். விசாரணையின்போது இளம்பெண் அங்கிதாவை விடுதி உரிமையாளரான புல்கிட் ஆர்யாவே கொலை செய்தது தெரியவந்தது.

அங்கிதாவை விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் தள்ளி புல்கிட் ஆர்யா கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சொகுசு விடுதியில் பணியாற்றும் மேலும் 2 ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்த புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட அங்கிதாவின் உடல் கால்வாயில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த அங்கிதாவை, ஆத்திரத்தில் விடுதி உரிமையாளர் புல்கிட் ஆர்யா கொலை செய்து கால்வாயில் வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மந்திரி மகன்

அங்கிதா கொலையை தொடர்ந்து புல்கிட் ஆர்யாவின் சொகுசு விடுதியை இடித்து தள்ள மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பெயரில், சட்டவிரோத இடத்தில் அமைந்த விடுதியின் குறிப்பிட்ட பகுதியை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர்.

அப்போது பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மாநில மந்திரியாக இருந்த வினோத் ஆர்யாவின் மகன்தான் இந்த புல்கிட் ஆர்யா. அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சொகுசு விடுதியின் சில பகுதிக்கு பொதுமக்கள் தீ வைத்தனர். மேலும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

தீவிர போராட்டம்

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. புல்கிட் ஆர்யாவின் சகோதரரான அங்கித் ஆர்யாவையும் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. புல்கிட் ஆர்யா உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வி.ஐ.பி. ஒருவருக்கு பாலியல் சேவை செய்ய வற்புறுத்துகின்றனர் என அங்கிதா பேசிய பேச்சுகள் அப்போது சர்ச்சையாகி இருந்தன.

வி.ஐ.பி.க்கு தொடர்பு உள்ளது என கூறப்பட்ட நிலையில், அது யார்? என்பது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பான ஆடியோ பதிவு ஒன்றும் வெளிவந்து வைரலானது.

ஆடியோ பதிவு

எனினும், இதுபற்றி முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கடந்த ஜனவரியில் கூறும்போது, அரசின் பணிகளை தடுக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது. யாரையும் தடுத்து விட முடியாது என்றார். தொடர்ந்து அவர், வினாத்தாள் கசிவு தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ஆடியோ பதிவு ஒன்று வெளிவந்தது. தற்போது மற்றொரு ஆடியோ பதிவு வெளியாகி உள்ளது.

இது சதி திட்டம் என உங்களுக்கு தோன்றவில்லையா? என கேட்டார். இது உணர்வுப்பூர்வம் வாய்ந்த விவகாரம். சம்பவம் பற்றி அறிந்ததும், காவல் துறைக்கு உத்தரவிட்டு உடனடியாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

சிறப்பு புலனாய்வு குழு

இந்த ஆடியோ பதிவில் நிறைய பெயர்கள் உள்ளன. அதுபற்றி விசாரிக்க வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. ஆடியோ முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அனைத்து வகை விசாரணைகளும் நடைபெறும் என்றார்.

யாரேனும் குற்றவாளி என கண்டறியப்பட்டால், அவர்கள் தப்ப முடியாது. இதுவே எங்களுடைய அரசின் சாதனையாக கடந்த காலத்தில் பதிவாகி உள்ளது என கூறினார். குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் என்று அப்போது அவர் கூறினார்.

கவர்னருக்கு தொடர்பு

இந்த நிலையில், இந்த கொலையில் தற்போது சிக்கிம் கவர்னராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருப்பதாக அங்கிதா பண்டாரியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

ராகுல், பிரியங்கா ஆதரவு

துஷ்யந்த் கவுதம் தற்போது சிக்கிம் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அங்கிதா பண்டாரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். துஷ்யந்தை கவர்னராக நியமித்ததற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தியுடன் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். கவர்னருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய முடியாது என்பதால், அவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெற்றோர் கைது

இந்த நிலையில், பெற்றோர் இருவரையும் கடந்த அக்டோபர் 15-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர்கள், கவுதம் குமாரின் கவர்னர் நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அங்கிதா பண்டாரியின் தந்தை கூறும்போது, 24 மணிநேரத்திற்குள் அந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.

உண்மை கண்டறியும் சோதனை

அப்படி செய்யாவிட்டால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தெருக்களில் இறங்கி போராடுவோம். அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டி இருக்கும் என்று கூறினார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட பெற்றோர் இருவரையும் டெல்லி போலீசார் அன்று காலை விடுவித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் தலைவரான வினோத் ஆர்யாவுக்கு உண்மை கண்டறியும் சோதனையை நடத்த வேண்டும் என்று அங்கிதா பண்டாரியின் பெற்றோர் இன்று வலியுறுத்தி உள்ளனர்.

அங்கிதா தந்தை பரபரப்பு பேட்டி

இதுபற்றி அங்கிதா தந்தை அளித்த பேட்டியின்போது, சம்பவம் நடந்த இரவில், பதிவான வினோத் ஆர்யா தொடர்பான தொலைபேசி அழைப்பு விவரங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், உத்தராகண்டில் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தொடர்ந்து, அங்கிதாவின் தந்தை கூறும்போது, சம்பவத்தின்போது, டெல்லிக்கும் உத்தராகண்டுக்கும் தொடர்ந்து வினோத் ஆர்யா பயணம் மேற்கொண்டார். டெல்லியில் மூத்த அரசியல் தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார் என்று கூறியுள்ளார்.

தொலைபேசி உரையாடல்

தொடர்ந்து அவர், அந்த வி.ஐ.பி.யே சிக்கிம் கவர்னராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய தகவல் அக்டோபர் 12-ந்தேதி கிடைத்ததும், நாங்கள் டெல்லி இந்தியா கேட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக தேசிய கவுன்சிலை சந்தித்து, விசாரணை நிறைவடையும் வரை, அவரை கவர்னராக நியமிக்க கூடாது என்று குறிப்பு கடிதமும் அளித்தோம்.

எனினும், அக்டோபர் 19-ந்தேதி சிக்கிம் கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார் என்று கூறினார். இரு தினங்களுக்கு முன், கடந்த 15-ந்தேதி வினோத் ஆர்யா செய்தியாளர்களிடம் பேசும்போது, அந்த பெண்ணின் பெற்றோர் சம்பவத்திற்கு முன், அவரை துன்புறுத்தினர் என குற்றச்சாட்டாக கூறினார். இதனை தொடர்ந்தே அங்கிதாவின் பெற்றோர் உண்மை கண்டறியும் சோதனை மற்றும் சம்பவத்தன்று இரவில் நடந்த தொலைபேசி உரையாடல்களை பற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

SCROLL FOR NEXT