புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக, காக்கி உடையில் அதிரடி காட்டிய அண்ணாமலை, அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தனது அதிரடி பேச்சால் இளைஞர்களை ஈர்த்த அவர், குறுகிய காலத்திலேயே தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆனால், திடீரென 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமாலை மாற்றப்பட்டார். இதற்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
என்றாலும், சட்டசபை தேர்தலில் களம் காண அண்ணாமலை ஆர்வமாக இருந்தார். கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளும் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருந்து வந்தார்.
சட்டசபை தேர்தலிலும் முழு வீச்சில் அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதமும் 2 சதவீதமாக அதிரடியாக சரிந்தது.
இந்த நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை தனிக்கட்சி தொடங்கக் கோரி வலியுறுத்தி வந்தனர். அவரும் பதில் எதுவும் சொல்லாமல் அமைதி காத்து வந்தார். பா.ஜ.க. தலைமையும் அவரை சமரசம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கைக்கு திடீரென எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு அண்ணாமலை பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால், பா.ஜ.க.வை விட்டு அண்ணாமலை வெளியேறப்போவது உறுதி என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், நேற்று டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை, பா.ஜ.க. கொடியில்லாத காரில் வந்தார்.
இதுகுறித்தும், புதிய கட்சி தொடங்கப்போவதாக வரும் தகவல் குறித்தும் நிருபர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "2 நாட்கள் கழித்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். விரிவாக பேசலாம்" என்று கூறிச் சென்றார். அதாவது, நிருபர்கள் கேட்ட கேள்வியை அவர் மறுக்கவில்லை என்பதால், 2 நாட்களில் ஏதோ நடக்கப்போகிறது? என்பது மட்டும் தெரிகிறது.
இந்நிலையில் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து, தமிழக பா.ஜ.க. குறித்து கடிதம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள், உட்கட்சி மோதலில் ஈடுபடுவது யார், யார்.?, தான் ஒதுக்கப்பட்டதன் பின்னணி, பா.ஜ.க.வின் தோல்விக்கான காரணங்கள் என பல முக்கிய விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக டெல்லி பா.ஜ.க. தலைவர்கள், அண்ணாமலையை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமாதானம் செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.