திருப்பதி,
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதையொட்டி நேற்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
முன்னதாக அதிகாலை சுப்ரபாத சேவை, தோமால சேவா, கொலு மற்றும் பஞ்சாங்க சிரவணம் ஆகியவை நடந்தது. காலை 8.30 மணியில் காலை 10.30 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அப்போது மூலவர் சன்னதியில் இருந்து மகா துவாரம் வரை தண்ணீரால் தேய்த்து சுத்தம் செய்யப்பட்டது. அத்துடன் பூஜை பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டது.
தூய்மைப்பணி முடிந்ததும் நமக்கொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தன பொடி, குங்குமம், கிச்சிலிகட்டை ஆகிய பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 11 மணியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.