கொச்சி,
கேரளம் முதல்-மந்திரியாக பினராயி விஜயன் இருந்தபோது. அவருடைய மகள் வீணா நடத்திய எக்சலாஜிக் நிறுவனத்துக்கு கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் முறைகேடாக ரூ.2 கோடியே 78 லட்சம் வழங்கியது. இதுகுறித்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் விசா ரித்த அமலாக்கத்துறை, பினராயி விஜயன் மற்றும் மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கேரளம் போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியது.
ஆனால், வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு, அமலாக்கத்துறை அறிக்கை மீது பூர்வாங்க விசா ரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரளம் அரசு அமைத்தது. இதற்கிடையே பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, கே.எம்.ஷாஜகான் என்ப வர் கேரளம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.பதாருதீன், அமலாக்கத்துறை அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில், பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட் டத்தின்கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.
இதற்கு எதிராக பினராயி விஜயன், வீணா, முகமது ரியாஸ் ஆகியோர் கேரளம் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்ட தனி அமர்வு நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்வது தவறான நடைமுறை. எனவே, இதை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, ஊழல் தடுப்புச்சட்டம், சட்ட விரோத பண பரிமாற்றம் என 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.