அமராவதி,
ஆந்திராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு குழந்தை மற்றும் ஒரு மாணவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சொகுசு பஸ் ஒன்று நேற்று இரவு திருப்பதியிலிருந்து கடப்பா நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் கடப்பா மாவட்டம் உடுமுவாரிபள்ளி கிராமம் அருகே சென்றபோது சொகுசு பஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பேருந்தின் வலது பக்கத்தில் இருந்த சுமார் 6 இருக்கைகள் கடுமையாக சேதமடைந்தன.
அந்த இருக்கைகளில் இருந்த ஒரு குழந்தை மற்றும் ஒரு மாணவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இதில் லாரி ஓட்டுநரும் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகாயமடைந்த 16 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ராஜம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பிற மருத்துவ வசதிகளுக்கு ஏற்றவாறு பிற மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 27 பயணிகள் பயணம் செய்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரப் பிரதேச போக்குவரத்து அமைச்சர் எம். ராம்பிரசாத் ரெட்டி இந்த விபத்து குறித்து கூறுகையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தேவைப்பட்டால், படுகாயமடைந்தவர்களை உயர் மருத்துவ மையங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ரெட்டி, சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விபத்தில் சிக்கிய பேருந்து, லாரி தொடர்பான விவரங்களையும் கேட்டார்.
மேலும், ராஜம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலையையும் அவர் ஆய்வு செய்தார். இதற்கிடையில் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர