Image Credits: Grok AI 
தேசிய செய்திகள்

இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக ஆப்பிள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

ஆப்பிள் நிறுவனமும் ஆப்பிள் பே எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

செல்போன், கணினி உற்பத்தியில் உலக அளவில் மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பல லட்சம் கோடிகளைத் தாண்டும். ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் விரைவில் பேமெண்ட் செயலி துறையில் ஆப்பிள் கால் பதிக்க உள்ளது. கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இந்த செயலிகள் மூலம் விரைவாகப் பணம் அனுப்ப முடிகிறது. இந்நிலையில்தான், ஆப்பிள் நிறுவனமும் ஆப்பிள் பே (Apple Pay) எனும் செயலியை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுடன் அந்நிறுவனம் பேசி வருகிறது. இவை தவிர, மாஸ்டர் கார்டு, விசா ஆகிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் மத்தியில் இவ்வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் ஆப்பிள் செயல்பட்டு வருகிறது. இந்திய ஸ்மார்ட் மொபைல் சந்தையில் 10 சதவீத பங்கு வகிக்கும் ஆப்பிள், இவ்வசதி வாயிலாக கூடுதல் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறது. ஆப்பிள் பே செயலி அமெரிக்காவில் முதல் முறையாக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT