தேசிய செய்திகள்

உங்கள் சொந்த பிள்ளைகளை அமைச்சர்களாக்கிக்கொண்டு, இளைஞர்கள் மீது தடியடி : தேஜஸ்வி யாதவ் கண்டனம்

வேலைவாய்ப்புகளுக்கு எதிரான இந்த அரசு கொடுமைகளை இழைத்து வருகிறது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

பாட்னா,

தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பீகாரில் நடைபெற்றுக்கொண்டிருப்பது சரியாக இதுதான். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், தேர்தல் செயல்முறையில் பங்கேற்காமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கியுள்ளனர்.

ஆனால், பல ஆண்டுகளாக கடுமையாக படித்து உழைத்த பீகாரை சேர்ந்த இலட்சக்கணக்கான இளைஞர்களிடம், ஆசிரியர் தகுதி (TRE-4) தேர்வுக்கான காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தேர்தல் சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர்.

ஆயினும், ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்த பிறகும், ஆசிரியர் தகுதி TRE-4 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மாறாக, அந்த பணியிடங்களை நிரப்ப கோரி போராடுபவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு பீகார் இளைஞர்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? ஏன் அவர்களை ஒடுக்குகிறது? தங்களிடம் வாக்குகள் கேட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுமாறு மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள்.

இந்த இளைஞர்கள் தங்கள் உரிமைகளை மட்டுமே கோருகிறார்கள், மேலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள். ஆனால், வேலைவாய்ப்புகளுக்கு எதிரான இந்த அரசு கொடுமைகளை இழைத்து வருகிறது.

பீகார் இளைஞர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி இழைத்த இந்த துரோகத்தை பீகார் ஒருபோதும் மறக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.