சென்னை,
இந்தியாவில் அதிவேக ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் 7 புதிய புல்லட் ரெயில் வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் மும்பை-புனே, பெங்களூரு-சென்னை, பெங்களூரு-ஐதராபாத், புனே-ஐதரா பாத், டெல்லி-லக்னோ, டெல்லி-வாரணாசி மற்றும் டெல்லி-சிலிகுரி ஆகியவை அடங்கும்.இந்தத் திட்டங்கள் நிறைவேறும்போது, முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் கணிசமாகக் குறையும். குறிப்பாக, மும்பை-புனே இடையே 48 நிமிடங்களிலும், பெங்களூரு-சென்னை இடையே 73 நிமிடங்களிலும் பயணிக்க முடியும்.
நாட்டின் முதல் புல்லட் ரெயில் திட்டமான மும்பை பாத் ரெயில் பாதை பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இது அடுத்த ஆண்டு (2027) பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் 7 புதிய புல்லட் ரெயில் வழித்தடத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்திய போக்குவரத்து கட்டமைப்பில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதனை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னை- பெங்களூரு புல்லெட் ரெயில் சென்னை சென்டிரலில் தொடங்கி பூந்தமல்லி, பரந்தூர் புதிய விமான நிலையம், சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளது.பெங்களூரு நகருக்குள் நுழையும்போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ஒயிட்பீல்டு முதல் பையப்பனஹள்ளி வரை சுமார் 12 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மும்பை, புனே, ஆமதாபாத், சூரத் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்கள் ஒரே பொருளாதாரச் சூழலுக்குள் கொண்டு வரப்படும். இத்திட்டங்கள் இந்தியாவின் பயண அனுபவத்தை மாற்றியமைப்பதோடு, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த புல்லட் ரெயில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு மாநகரங்களும் வணிக ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் இன்னும் மேலும் வளர்ச்சி அடையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.