மும்பை,
மராட்டியத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் மொத்தம் உள்ள 358 தாலுகாக்களில், 304 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக் கப்பட்டுள்ளது. இங்கு 33 சதவீதத்திற்கும் மேலாக பயிர் சேதமடைந்த விவசாயிக ளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அவசர வறட்சி நிவாரண முன்பணம் வழங்கப்பட உள்ளது. இந்த முடிவுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 1½ கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக மாநில அரசுக்கு ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவாகும். இந்த வாரத்திற்குள்ளேயே விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக இந்தப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். இதே கூட்டத்தில் புனே நகரில் டெல்லி 'பாரத் மண்டபம்' பாணியில் பிரமாண்ட தேசிய அளவிலான கண்காட்சி மையம் அமைக்கவும் மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக புனே லோஹேகான் பகுதியில் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மாற்றியமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இது தவிர, மராட்டிய மின்சார வாகன கொள்கையின் கீழ், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக 'பஜாஜ் ஆட்டோ' நிறுவனத்திற்கு ரூ.66.82 கோடி நிதி உதவி வழங்கவும் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.