புதுடெல்லி,
தற்காலத்து இளைஞர்களை, குறிப்பாக ‘ஜென்-ஸி’ (Gen-Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினரை கவர்வதற்கு பல மூத்த அரசியல் தலைவர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆகத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்களோடு உரையாடும் விதமாக பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டார்.
தொடர்ந்து பா.ஜ.க.வின் பிற மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்டோரும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை வெளியிடத் தொடங்கினர். இதே போல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இளம் தலைமுறையினரோடு கலந்துரையாடும் வகையில் ‘Ask me anything'(என்னிடம் எதையும் கேளுங்கள்) என்ற பெயரில் நெட்டிசன்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
அதில் ஒருவர் வேடிக்கையாக, “‘நீங்கள்தான் பேட்மேனா..?’ என்று கேட்டிருந்தார். இதற்கு ராகுல் காந்தி நகைச்சுவையாக, “என்னையும், பேட்மேனையும் ஒரே அறையில் இதுவரை யாரும் பார்த்ததில்லை” என்று பதிலளித்தார்.
‘பா.ஜ.க.வை சேர்ந்தவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி யார்?” என்ற கேள்விக்கு ‘கேப்டன் அமரிந்தர் சிங்’ என்று ராகுல் பதிலளித்தார். அமரிந்தர் சிங் கடந்த 2022-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர் ஆவார்.
‘உங்களுக்கு மிகவும் பிடித்த தத்துவம் எது?’ என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ராகுல் காந்தி, “புத்தர், குருநானக் தேவ், பசவண்ணா, பிர்சா முண்டா, பெரியார், மகாத்மா பூலே, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் காந்திஜி உள்பட, நமது அரசியலமைப்பை வடிவமைத்த பல்வேறு தத்துவங்கள் எனக்கு பிடித்தமானவை” என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் நடந்த மாணவர் போராட்டத்தின்போது இணையத்தில் பல்வேறு மீம்ஸ் டிரெண்டாகி வந்த நிலையில், அதில் ராகுல் காந்திக்கு எது மிகவும் பிடித்திருந்தது? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு ராகுல் காந்தி, “நள்ளிரவில் பிரதமர் மோடியின் வீட்டில் இருந்து வந்த ரீல்ஸ் வீடியோதான் மிகச் சிறந்தது என்று நினைக்கிறேன். பதற்றமடைந்த ஒரு புதிய பிரதமரை அதில் பார்க்கமுடிந்தது” என்று கூறினார்.