போரிவிலி,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் மயங்க் லோகர் (வயது 22). இவர் மும்பையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்றுஇரவு 10.30 மணி அளவில் அவர் சர்ச்கேட்டில் இருந்து நாலாச்சோப்ரா நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் அந்தேரி ரெயில் நிலையத்தை தாண்டி போரிவிலி நோக்கி சென்ற போது பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக ெரயிலின் வாசல் வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது. இதனால் வாசல் அருகே நின்ற மயங்க் லோகர், அருகே நின்ற மற்றொரு பயணியிடம் ெரயிலின் கதவை மூடுமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் கதவை மூட மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை கண்ட மற்ற பயணிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபர் மயங்க் லோகரை சராமாரியாக குத்தினார். இதனை கண்ட பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உடனடியாக வந்த போலீசார் வாலிபரை மீட்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓடும் ரயிலில் வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் மும்பை ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய நபரை இன்று மாலை போலீசார் கைது செய்தனர்.