மும்பை,
செல்போன் கேட்டு மலை உச்சியில் தற்கொலைக்கு முயன்ற மகனை தந்தை காப்பாற்ற முயற்சி செய்தபோது இருவரும் கீழே விழுந்து உயிரிழந்தனர். அதிர்ச்சியில் தாய் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் ஜால்டா பாடா பகுதியை சேர்ந்தவர் முரளிதர் (வயது48). இவரது மனைவி சங்கீதா (44). இவர்களது மகன் குணால் (19). இவர் சமீபத்தில் பெற்றோரிடம் விலையுர்ந்த புதிய செல்போன் கேட்டார். ஆனால் அவர்கள் உடனடியாக செல்போன் வாங்கி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பெற்றோருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது.
ஆத்திரம் அடைந்த குணால் நேற்று காலை 10 மணியளவில் தற்கொலை செய்யப்போவதாக வாலுஜ் எம்.ஐ.டி.சி. திஸ்காவ் பகுதியில் உள்ள மலை உச்சிக்கு சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த குணாலின் தந்தை முரளிதர், தாய் சங்கீதா அங்கு விரைந்தனர். மேலும் கிராம மக்களும் அங்கு வந்தனர்.
இதில் பெற்றோர் மலை உச்சி மீது ஏறி மகனை சமாதானம் செய்ய முயன்றனர். ஊர் பஞ்சாயத்து தலைவரும், தான் புதிய செல்போன் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். எனினும் வாலிபர் மலை உச்சியில் இருந்து கீழே இறங்க மறுத்துவிட்டார். மேலும் யாராவது அருகில் வந்தால் கீழே குதித்துவிடுவேன் என மிரட்டினார்.
தடுக்கி விழுந்தால் பேராபத்து என்று தெரிந்தபோதிலும், குணால் சர்வசாதாரணமாக கத்தி மேல் நடப்பது போன்று மலை உச்சியில் நின்று கொண்டு இருந்தார். அவரது செயல் பெற்றோரையும், கிராம மக்களையும் நிலைகுலைய வைத்தது.
தாய், தந்தை இருவரும் தொடர்ந்து கெஞ்சினர். மன்றாடி பார்த்தனர். ஆனால் குணால் மனம் மலையை விட்டு இறங்க சம்மதிக்கவில்லை.
இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மலைக்கு கீழே வலை விரித்து வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபர் இடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததால் தீயணைப்பு படையினர் கீழே வலை விரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சுமார் 3 மணி நேரமாக இந்த திக்... திக்... போராட்டம் நீடித்தது. வாலிபர் யார் கூறுவதையும் கேட்கவில்லை. மதியம் 1 மணியளவில் முரளிதர் மகன் அருகே நெருங்கி சென்றார். அவர் மகனை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தந்தை, மகன் 2 பேரும் மலை உச்சியில் இருந்து சுமார் 500 அடி பாதாளத்தில் விழுந்தனர். தன் கண் முன்னே கணவரும், மகனும் மலை உச்சியில் இருந்து விழுந்ததை பார்த்து அங்கு நின்ற சங்கீதாவின் நெஞ்சம் பதறிபோனது. உடனே அவர் மலையில் இருந்து கீழே குதித்து விட்டார். அருகில் இருந்தவர்கள், மீட்பு படையினர் சுதாரிப்பதற்குள், நொடிப்பொழுதில் இந்த துயரம் நேர்ந்து விட்டது.
இதில் மலையில் இருந்து விழுந்த தந்தை, மகன், தாய் 3 பேரும் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த காட்சிகளை நேரில் பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.