தேசிய செய்திகள்

இந்திய பாதுகாப்பு படைகளிடம் போதிய ஆயுதங்கள் உள்ளது - மத்திய அரசு தகவல்

இந்திய பாதுகாப்பு படைகளிடம் போதிய ஆயுதங்கள் உள்ளது என மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாதுகாப்பு படைகளிடம் நியாயமான மற்றும் போதுமான ஆயுதங்கள் உள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி அருண் ஜெட்லி மாநிலங்களவையில் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கு இருநாட்டு ராணுவமும் எதிர்-எதிர் நிலையில் நிற்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்நிலையில் எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்று சிஏஜி அறிக்கை தகவல் வெளியாகியது.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து பேசிய அருண் ஜெட்லி, இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாதுகாப்பு படைகளிடம் நியாயமான மற்றும் போதுமான ஆயுதங்கள் உள்ளது என்றார். ஆயுத குறைப்பாடு உள்ளது என்பது தொடர்பாக சிஏஜி விடுத்த அறிக்கையானது குறிப்பிட்ட காலத்தை சார்ந்தது என கூறிஉள்ளார். அதனையடுத்து குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, என்று குறிப்பிட்டார் அருண் ஜெட்லி.

ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் வாங்குவது தொடர்பான நடைமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டு உள்ளது, ஆயுதம் வாக்குவதற்கான அதிகாரமானது பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது, இந்திய பாதுகாப்பு படைகள் நியாயமான மற்றும் போதுமான ஆயுதங்களை கொண்டு உள்ளது, என கூறிஉள்ளார்.

மத்திய அரசின் பதிலால் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள், கடினமான கேள்விகளை அரசை நோகி எழுப்பியது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா பேசுகையில், ஆயுதங்கள் வாங்குவதற்கான நடைமுறைகள் எப்போது எளிமையாக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார். கடந்த மூன்று வருடங்களாக எதுவும் செய்யப்படவில்லை, நிரந்தரமான பாதுகாப்புத்துறை மந்திரிகூட கிடையாது என எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டன. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என்றால் தனி நோட்டீஸ் வழங்க வேண்டும் என துணை சபாநாயகர் பிஜே குரியன் கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் அரசிற்கு கடுமையான கேள்விகளை முன்வைத்தது.

SCROLL FOR NEXT