ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பர்ஹி பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது வங்கிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பேர் நுழைந்தனர். அந்த கும்பல் வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டினர். பின்னர், வங்கியில் இருந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம், 4 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் பட்டப்பகலில் வங்கிக்குள் நுழைந்து ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.